உலகினரை வியக்கச்செய்த தமிழனின் கலைகள் மற்றும் திறமைகளை ஆவணப்படுத்துதல் அவசியமாயுற்று!!!

திருமயம்

                                             திருமயக்கோட்டை

திருமயம்: (ஆங்கிலம்: Thirumayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டத் தலைநகரம் ஆகும்.



பெயர்க்காரணம்:

'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', வடமொழிச் சொல்லான 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் இருந்து உருவானது.        இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.
    மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார்.   அவர் இங்கு வந்தது    எழுந்தருளியதால்   'திருமெய்யம்'    என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்:

இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது.              இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.        திருமங்கை ஆழ்வார்        இவ்வூரில் உள்ள திருமாலை,
“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே
என பாடியுள்ளார்.
இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887ல் பிறந்தார்.


பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு

திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஆகஸ்ட் 2,2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப் பட உள்ளன.

திருமயம் மலைக்கோட்டை:       1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் (மறவ மன்னர்கள் தங்களை சேதுபதி என்றழைத்துக் கொண்டனர்) விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671–1710) காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

வரலாறு:

திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 – 17 நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து பல்லவர்களாலும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.



மலைக்கோட்டை அமைப்பு:

திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
-----)       மலைக்கோட்டையின் உச்சியில்   ஒரு பீரங்கி மேடையில்   கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி   (-----
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பாகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




3 comments:

குடைவரைக் கோவில்   ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவில் :                                                 பெரிய மலைகளை (வரைகளை) குடைந்த...