குன்றக்குடி குடைவரை கோயில்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இதில் பாறையில் வெட்டப்பட்ட மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அமைப்பு:
இம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச்
சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து
வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள
பகுதியில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர்
சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக
மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச்
சேர்ந்தது.
சிற்பங்கள்:
இக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். ஒரு முறை, சிவனைத் திருமால் ஆயிரத்து எட்டுத் தாமரை
மலர்களால் அர்ச்சிக்கும் போது திருமாலைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான்,
ஒருமலரை எடுத்து ஒளித்து வைத்தாராம். அப்போது திருமால் காணாமற் போன ஒரு
தாமரை மலருக்கு ஈடாகத் தனது
கண்களுள் ஒன்றைப் பிடுங்கி மலராக
அர்ச்சித்தாராம். இச்செயலால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கர ஆயுதத்தை
அளித்ததாகக் கூறப்படும் புராணக்கதை இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாகச்
செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால்
கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின்
கையில் இருப்பதையும் காண முடிகிறது.
கல்வெட்டுக்கள்:
இங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சில கல்வெட்டுக்களில் மன்னர் பெயர்கள் காணப்படவில்லை.
No comments:
Post a Comment